ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் மேற்கு வங்காள பயணம் ரத்து
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.;
கொல்கத்தா,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று ( ஜூலை 9) மேற்கு வங்காளத்திற்கு சென்று ஆதரவு திரட்ட இருந்தார். கொல்கத்தாவில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மேற்கு வங்காள பாஜக அறிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் மேற்கு வங்காள பயணம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.