டியூசன் சென்று திரும்பிய சிறுமியை கிண்டல் செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் - பலர் படுகாயம்
டியூசன் சென்று திரும்பிய சிறுமியை சில இளைஞர்கள் கிண்டல் செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் பன்நகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிச்சிறுமி நேற்று மாலை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதை மற்றொரு தரப்பு இளைஞர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மேலும், இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் நடைபெறாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.