பெங்களூருவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்- டி.கே.சிவக்குமார்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-28 04:39 GMT

பெங்களூரு

பெங்களூரு மாநகராட்சியில் நேற்று பிராண்ட் பெங்களூரு திட்டத்தின் கீழ் நகரின் வளர்ச்சி குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மந்திரி ஜமீர் அகமதுகான், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்வது முக்கியமாகும். இதற்காக நகரில் இனிமேல் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அடுக்கில் மெட்ரோ ரெயில், மற்றொரு அடுக்கில் வாகனங்கள், அதன்கீழ் உள்ள சாலையிலும் வாகனங்கள் செல்லும்படி இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியை மாநகராட்சி, மெட்ரோ ரெயில் நிர்வாகம் இணைந்து வழங்கும்.

மேலும் ரூ.11 ஆயிரம் கோடியில் சிக்னல் இல்லாத மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். பெங்களூருவில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும், தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுபற்றி முடிவு எடுக்கும் பொறுப்பு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு விடப்பட்டுள்ளது. அதுபோல், குப்பை பிரச்சினையை தீர்க்க, நகரின் 4 பகுதிகளிலும் இடம் தேடும் பணி நடக்கிறது.

அரசுக்கு சொந்தமான நிலம் இல்லாவிட்டால், தனியாரிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டு, அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு, அழிக்கப்படும். பெங்களூருவுக்கு வருபவர்கள் நகரை பார்த்து ரசிக்க டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது'

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்