மாற்று கட்சியினரின் விமர்சனத்தை பற்றி கவலை இல்லை- டி.கே.சிவக்குமார் பேட்டி

மாற்று கட்சியினரின் விமர்சனத்தை பற்றி கவலை இல்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-10 17:09 GMT

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா வரலாற்று சிறப்புமிக்க கால கட்டம். இது ஒரு திருவிழா. இதை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். மாற்று கட்சி தலைவர்கள் எத்தகைய விமர்சனத்தை முன்வைத்தாலும் அதை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். வரலாற்றை மறைக்க யாராலும் முடியாது. 15-ந் தேதி பெங்களூரு சங்கெள்ளி ராயண்ணா சர்க்கிளில் இருந்து ஒரு லட்சம் தேசிய கொடிகளுடன் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஊர்வலம் பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் முடிவடையும். இதையொட்டி அங்கு கலாசார நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கட்சி சார்பற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சியின் தேசிய தலைவர்களை கேட்டு கொண்டுள்ளோம். பிரியங்கா காந்திக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் அவர் பெங்களூரு வர வாய்ப்பு இல்லை.

நாட்டிற்கு அனைவரும் கவுரவம் அளிக்க வேண்டும். பா.ஜனதாவினர் நடத்தும் நிகழ்ச்சிகளை நான் குறை சொல்ல மாட்டேன். கர்நாடகத்தின் நலனில் பா.ஜனதா அக்கறை செலுத்துவது இல்லை. முதல்-மந்திரியை மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பா.ஜனதாவினரின் விருப்பம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்