பாரத்-இந்தியா விவகாரம் பற்றி பேச வேண்டாம்; மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பாரத்-இந்தியா விவகாரத்தில் இருந்து விலகி இருக்கும்படி மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அதற்கான அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இரவு விருந்தில் கலந்து கொள்ள ராஷ்டிரபதி பவன் சார்பில் விடப்பட்ட அழைப்பில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி வரலாறை திரித்து, இந்தியாவை பிரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இந்தியா மற்றும் பாரத் என்ற பெயர் சர்ச்சை பற்றி கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தின. இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பும் வெளியானது.
இதுபற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், 9 விசயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். பிற அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதிக்க கூடாது என்ற மரபு மீது சோனியா காந்தி கவனம் செலுத்தவில்லை என மத்திய அரசு கடுமையாக பதிலளித்து இருந்தது.
இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இதில், இந்தியா மற்றும் பாரத் விவகாரம் பற்றி பேச வேண்டாம். அதில் இருந்து விலகி இருக்கவும் என மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் பற்றி பிரதமர் முதன்முறையாக தன்னுடைய மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என அறியப்படுகிறது.
எனினும், இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, ஜி-20 உச்சி மாநாட்டை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்த சிறப்பு கூட்டத்தொடரானது, இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.