ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்: பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா
இந்தியா கூட்டணியின் ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம் என்று மக்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலையொட்டி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஹாவேரியில் பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மையை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியதாவது:-
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட ஊழல் செய்த கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஊழல் வழக்குகளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், லாலுபிரசாத் யாதவ், டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். மேற்கு வங்காள மந்திரி சிறையில் இருக்கிறார்.அதனால் இந்தியா கூட்டணியின் ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம். வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் நீங்கள் மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.