இந்தியர்கள் எல்லோரையும் குறை சொல்லவில்லை: பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் பெண் பேட்டி

அமைதியாகவும் அழகாகவும் இருந்ததால் இரவில் தங்குவதற்கு அந்த இடத்தை தேர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண் தெரிவித்தார்.

Update: 2024-03-06 06:58 GMT

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் இருசக்கர வாகனம் மூலம் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு நாடுகளில் பைக் பயணத்தை முடித்துக்கொண்ட அந்த தம்பதி, இந்தியாவில் கடந்த 6 மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தபோது, உள்ளே புகுந்த ஒரு கும்பல், கணவரை தாக்கிவிட்டு, அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், சிகிச்சைக்கு பிறகு கணவருடன் தனது உலக சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார். நேற்று தும்கா மாவட்டத்தில் இருந்து நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பீகார் வழியாக அவர் நேபாளம் செல்கிறார். புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மக்கள் நல்லவர்கள். நான் ஒட்டுமொத்தமாக இந்திய மக்களை குறை கூறவில்லை. ஆனால் குற்றவாளிகளை மட்டுமே மோசமானவர்கள் என்கிறேன். இந்திய மக்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர்.

அமைதியாகவும் அழகாகவும் இருந்ததால் இரவில் தங்குவதற்கு அந்த இடத்தை தேர்வு செய்தோம். தனியாக தங்குவதற்கு அந்த இடம் பாதுகாப்பானதாக இருக்கும் என நினைத்தோம்.

கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் 20,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக பாதுகாப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். எங்களுக்கு எந்த பகுதியிலும் பிரச்சினை ஏற்படவில்லை. முதல்முறையாக இது நடந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்