இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் - ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி கண்டனம்

இந்தியாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-06 13:14 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும், ஜனநாயக உலகின் அங்கமாக உள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்பு மீதான தாக்குதலை கண்டுகொள்ளாமல் தோல்வியடைந்துவிட்டதாக அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ராகுல்காந்தி இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் மீதான எதிர்ப்பு பிரச்சினை குறித்து உங்களின் சிறிய புரிதலை காட்டுகிறது. வெளிநாட்டு மண்ணில் இருந்துகொண்டு இந்தியா குறித்து நீங்கள் பரப்பும் பொய்களை யாரும் நம்பமாட்டார்கள். சர்ச்சைகளின் புயலாக ராகுல்காந்தி மாறியுள்ளார். வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு மண் எதுவாக இருந்தாலும் இந்தியாவை இழிவுபடுத்தும் ஒற்றை வாய்ப்பையும் ராகுல்காந்தி தவறவிடுவதில்லை.

அவரின் பேச்சு, சிந்தனை, நடவடிக்கை அனைத்தின்மீதும் சந்தேகம் வருகிறது. இது முதல் முறையல்ல, மீண்டும் மீண்டும் அவர் இதையே செய்கிறார். கொரோனா வைரஸ் தாக்கியபோது ராகுல்காந்தி இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி மீது சந்தேக கேள்வி எழுப்பினார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்