நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கவர்னர்கள் செயல்பாடு பற்றி தி.மு.க., பி.ஆர்.எஸ். முறையீடு
அனைத்து கட்சி கூட்டத்தில், கவர்னர்கள் செயல்பாடுகள் குறித்து தி.மு.க., பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில், கவர்னர்கள் செயல்பாடுகள் குறித்து தி.மு.க., பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின. விதிகளின்படி, ஒவ்வொரு பிரச்சினையையும் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 14-ந் தேதி முடிவடைகிறது. 2-வது பகுதி, மார்ச் 12-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 27 அமர்வுகள் கூட்டத்தொடர் நடக்கிறது.
இந்ததொடரில், 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, சீனப்படைகள் அத்துமீறல், அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது.
அதில், மத்திய அரசு தரப்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி மற்றும் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (தி.மு.க.), தம்பிதுரை (அ.தி.மு.க.), ஜி.கே.வாசன் (த.மா.கா.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி) உள்பட 27 கட்சிகளை சேர்ந்த 37 பிரதிநிதிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதானி விவகாரம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங், ராஷ்டிரீய ஜனதாதளத்தை சேர்ந்த மனோஜ் ஜா மற்றும் தி.மு.க., இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக கூறப்படும் பிரச்சினையை எழுப்பினர்.
அப்பிரச்சினை பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனோஜ் ஜா கூறினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய்ரெட்டி, நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பொருளாதார பின்னணியை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கவர்னர்கள் செயல்பாடு
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுங்கட்சிகளான தி.மு.க., பி.ஆர்.எஸ். (பாரதீய ராஷ்டிர சமிதி) ஆகியவை கவர்னர்களின் செயல்பாடுகள் குறித்து பிரச்சினை எழுப்பின. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, பி.பி.சி. ஆவணப்படம் குறித்த சர்ச்சையை எழுப்பினார்.
அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, கச்சத்தீவு பிரச்சினை, இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும் குறிப்பிட்டார்.
விவாதிக்க தயார்
அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்த பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விதிகளின்படியும், சபாநாயகர் அனுமதியுடனும், ஒவ்வொரு பிரச்சினையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. சபையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.