எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி

சோலார் மின் திட்டங்கள் குறித்து எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.;

Update: 2022-11-05 18:45 GMT

பெங்களூரு:

சோலார் மின் திட்டங்கள் குறித்து எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விசாரணைக்கு தயார்

மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சோலார் மின்சார திட்டம், சோலார் பூங்கா திட்டம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், மின்சார துறை மந்திரி சுனில்குமாரும் பெருமையாக பேசி வருகின்றனர். மற்றொருபுறம் இதே சோலார் பூங்கா திட்டம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பேசி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் துமகூரு மாவட்டம் பாவகடாவில் சோலார் பூங்கா அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

மாநிலத்தில் சோலார் பூங்கா அமைக்கும் திட்டத்திலும் சரி, சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவினர் கூறி வருவதால், அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டால், அதனை வரவேற்கிறேன். எந்த விதமான விசாரணைக்கு உத்தரவிட்டாலும், அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தாமல், வாடகைக்கு நிலத்தை பெற்று சோலார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிக்கும் வாடகை கிடைத்து வருகிறது.

பிரதமர் பாராட்டு

பாவகடாவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பூங்காவில் ஏதேனும் சிறிய தவறுகள் நடந்திருந்தாலும், எந்த விதமான விசாரணை வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். நான் மின்சார துறை மந்திரியாக இருந்த போது மின்உற்பத்தியை அதிகரிக்க பல திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினேன். அதன்படி மின்உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதுபற்றி அரசிடமும் தேவையான தகவல் உள்ளது. மின் உற்பத்தி விவகாரத்தில் நான் எப்படி செயல்பட்டேன் என்பது பற்றி மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கூட கர்நாடக மின்துறை வளர்ச்சிக்காக 2 விருதுகள் வழங்கி இருப்பதை பா.ஜனதா அரசு மறந்து விடக்கூடாது. சோலார் மின்உற்பத்தியில் கர்நாடகம் முன்மாதிரியாக விளங்குவதாக பிரதமர் எனக்கு பாராட்டு கடிதம் அனுப்பினார். இதனை மூடிமறைக்க யாராலும் சாத்தியமில்லை. பாவகடாவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பூங்கா திட்டத்தை மூடுவதற்கு அரசு முயற்சிக்கிறது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்