தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க சட்ட நிபுணர்கள் ஆலோசனை; டி.கே.சிவக்குமார் பேட்டி
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறையை வகிக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நதிநீர் பிரச்சினைகள்
கர்நாடகத்தின் பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த அனுமதியை பா.ஜனதாவால் பெற முடியவில்லை. கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதாவால் தான் தொந்தரவு ஏற்படுகிறது. நீர் விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
பா.ஜனதாவினர் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் குறை சொல்லட்டும், நான் கர்நாடகத்தின் நலனுக்காக உழைக்கிறேன். அனைத்து நதி நீர் பிரச்சினைகளும் 3 ஆண்டுகளில் நிறைவடைய வேண்டும் என்று மத்திய அரசே சட்டம் இயற்றியுள்ளது. மத்திய அரசே கர்நாடகம்-தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உட்கார வைத்து பிரச்சினையை தீர்க்கலாம் அல்லவா?. பெரிய பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா?.
திறக்க முடியாது
மேகதாது திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி பிரச்சினை வராது. அவரவர்களுக்கு தங்கள் மாநிலத்தின் நலன் முக்கியம். மத்திய அரசுக்கு உண்மை நிலை தெரியும். அதனால் கர்நாடகம்-தமிழகத்தை அழைத்து மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். காவிரி நீர் திறக்க சாத்தியம் இல்லை என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் சொல்வதற்கு முன்பு 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கும்படி சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
நாங்கள் நீரை திறக்க முடியாது என்று கூறினோம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும்போது, உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என்று கேட்பார்கள். உத்தரவை பின்பற்றாவிட்டால் நமக்கு தொந்தரவு ஏற்படும் என்று ஆலோசனை கூறியுள்ளனர். மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் நான் உண்மை நிலையை விவரித்துள்ளேன். வரும் நாட்களில் கர்நாடகம் எந்த மாதிரியான முடிவு எடுக்கும் என்பதையும் கூறியுள்ளேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.