கர்நாடகத்திற்கு அரிசி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசின் சதியை அம்பலப்படுத்துவோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
கர்நாடகத்திற்கு, மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் உள்ள பெரிய சதியை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடகத்திற்கு, மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் உள்ள பெரிய சதியை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஏழைகளுக்கு அரிசி
கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து எல்லாவற்றையும் விரைவில் அம்பலப்படுத்துவோம். மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.
கர்நாடக அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் எண்ணத்தில் ஏழைகளுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அரிசியை இலவசமாக வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இந்திய உணவு ஆணையம் விவசாயிகளிடம் இருந்து அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தற்போது அந்த ஆணைய கிடங்குகளில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
அரிசி வழங்குவதாக முதலில் கூறவிட்டு, பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறினர். மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நாளை(இன்று) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார். முதலில் பா.ஜனதா எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கட்டும். மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றி கொள்வோம். எனது சகோதரர் டி.கே.சுரேஷ் அறிவார்ந்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்த தலைவர். புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு எந்த வைராக்கியமும் இல்லை.
மந்திரிகளுக்கு பொறுப்புகள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது, கட்சியின் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள மந்திரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க மந்திரிகள் அனைவரும் நாளை(இன்று) டெல்லி செல்கிறோம். இந்த சந்திப்பின்போது நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(இன்று) கடைசி நாள் ஆகும். மனு தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.