மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் இழுக்கவில்லை -டி.கே.சிவக்குமார் பேச்சு
மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் காங்கிரசுக்கு இழுக்கவில்லை என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
மைசூரு:
மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் காங்கிரசுக்கு இழுக்கவில்லை என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
சுற்றுப்பயணம்
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஒருநாள் சுற்றுப்பயணமாக மைசூரு வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த 3 மாதங்களில் எந்தெந்த துறைகளில் குறைகள் உள்ளன. வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் உள்ள இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கக்கூடாது
இதில் அதிகாரிகள் யாரும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் உடனே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களது குறைகளை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எந்த ஒரு பணிக்கும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கக்கூடாது. இவ்வாறு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வு கூட்டத்தில் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர், எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் கவுடா, தன்வீர்சேட், ஜி.டி.தேவேகவுடா, மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை அதிகாரி காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் அரசின் 5 திட்டங்களில் ஒன்றான கிரகலட்சுமி திட்ட தொடக்க விழாவை பெலகாவியில் நடத்துவதற்கு அந்த மாவட்ட மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் முடிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் கிரகலட்சுமி திட்டத்தின் தொடக்க விழா மைசூருவுக்கு மாற்றப்பட்டது.
ஆபரேஷன் கை
இதில் எந்த அரசியல் மாற்றமும் கிடையாது. பெலகாவியில் மற்றொரு நிகழ்ச்சியை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பால் மைசூருவில் கிரகலட்சுமி திட்டத்தை வருகிற 30-ந் தேதி தொடங்க உள்ளோம். அன்றே ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வந்து விடும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெலகாவியில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
ஆபரேஷன் கையை நாங்கள் செய்யவில்லை. மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் காங்கிரசுக்கு இழுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கையினால் மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். அப்படி வருபவர்களை தான் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து கொள்கிறோம். மாற்றுக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் காங்கிரசில் சேருவார்கள் என்பது தற்போது கூறமுடியாது. அதற்கான நேரம் வரும்போது கூறுகிறேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.