கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மீண்டும் தகுதி நீக்கம்
கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசலுக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பெரும்பாவூர்,
லட்சத்தீவு நாடாளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பி.பி.முகமது பைசல். இவர், சமீபத்தில்தான் கூட்டுறவு சங்கம் சார்பில் மீன் விற்பனை முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர்க்கொண்டார்.
இதற்கிடையே இவர், பி.சாலிக் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பாக லட்சத்தீவு கவரத்தி முதன்மை கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி விசாரணை நடத்திய லட்சத்தீவு கவரத்தி முதன்மை கோர்ட்டு முகமது பைசல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது பைசல், கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி கேரள ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது ஐகோர்ட்டு, மேல் விசாரணைக்காக முகமது பைசலுக்கு கவரத்தி முதன்மை கோர்ட்டு அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து அவர் மீண்டும் எம்.பி. பதவியை பெற்று தொடர்ந்தார்.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி இந்த வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் எம்.பி. குற்றவாளி என்று தெரியவந்தது.
இதையடுத்து ஐகோர்ட்டு, முகமது பைசல் எம்.பி.க்கு கீழ்கோர்ட்டான கவரத்தி முதன்மை கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மக்களவை செயலகம், முகமது பைசலை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. இதனால் அவர் 2-வது முறையாக மீண்டும் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.