ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலை... உ.பி. அரசு அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.;

Update: 2024-09-02 10:12 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் புதிய விளையாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துவது உட்பட, மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எடுத்துரைத்தார்.

முன்னதாக லக்னோவில் இந்த ஆண்டுக்கான முதலாவது ஆக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் இன்டர்-மண்டல சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவ்விழாவில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், விளையாட்டின் மீதான மக்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வலியுறுத்தினார். ஒலிம்பிக், காமன்வெல்த் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் அல்லது உலக சாம்பியனான எந்தவொரு நபருக்கும் நேரடியாக அரசு வேலை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "துரதிர்ஷ்டவசமாக, முன்பு இருந்த தலைமுறை மக்கள் விளையாட்டின் மீது எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர், ஆனால் இன்று பல நேர்மறையான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தனியார் விளையாட்டு அகாடமிகள் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இளைஞர்களிடையே விளையாட்டு குறித்த நேர்மறையான அணுகுமுறையை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

விளையாட்டுக் கொள்கையில், ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய அல்லது உலக சாம்பியனான வீராங்கனைகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் அரசுப் பணியில் இடம் அளிக்கப்படும், அது அவர்களை விளையாட்டில் முன்னேற ஊக்குவிக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, விளையாட்டுத் துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு பிரபல முன்னாள் ஆக்கி வீரரான மேஜர் தியான் சந்த் பெயர் வைக்கப்படும்" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்