தேவிரம்மன் கோவிலில் தீமிதி விழா; விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்
சிக்கமகளூருவில் உள்ள தேவிரம்மன் கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.
சிக்கமகளூரு;
தேவிரம்மன் கோவில்
சிக்கமகளூரு அருகே மல்லேனஹள்ளி கிராமத்தை அடுத்த பிண்டுகா பகுதியில் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள தேவிரம்மன் மலையின் உச்சியிலும் தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை சுமார் 2000 அடி உயரம் கொண்டதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி கடந்த 24-ந்தேதி தேவிரம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் தீபாவளி விடுமுறை என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மலை மேல் சென்று தேவிரம்மனை தரிசனம் செய்தனர். மேலும், அடிவாரத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் விறகுகள் மற்றும் நெய் மூலம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
உடுக்கை அடித்தால் நடை திறக்கும்
மேலும் கடந்த 25-ந்தேதி அடிவாரத்தில் தேவிரம்மன் கோவிலில் உடுக்கை அடித்தால் கோவில் நடை திறக்கும் நிகழ்வு நடக்க இருந்தது. ஆனால் அன்றைய தினம் சூரிய கிரகணம் நடந்ததால், கோவில் நடை மூடப்பட்டு உடுக்கை அடித்த பின்னர் நடை திறக்கும் நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் உடுக்கை அடித்தால் கோவில் நடை திறக்கும் நிகழ்வு நடந்தது.
அதாவது, கோவில் கருவறை கதவை மூடி வைத்து உடுக்கை அடித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது கோவில் நடை தானாக திறக்கப்பட்டது. இதனை அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பக்தி பரசவம் அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை ெசய்யப்பட்டது.
தீமிதி திருவிழா
இந்த நிலையில் நேற்று காைல மலை அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. இதில், மல்லேனஹள்ளி, பிண்டுகா பகுதியில் விரதம் இருந்த பக்தர்கள், தீக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து மதியம், தேவிரம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். இந்த பல்லக்கு பிண்டுகா, குமரகிரி, பக்தரஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு வீதி உலா சென்றது.
ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதையடுத்து அம்மன் பல்லக்கு கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.