தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் - காங்கிரஸ் கட்சி யோசனை

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி யோசனை தெரிவித்துள்ளது.;

Update: 2023-01-19 22:55 GMT

கோப்புப்படம்

போபால்,

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ளார். பஞ்சாபில் உள்ள பதன்கோட்டில் இருந்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "தேர்தலில் வாக்காளர் வாக்கு அளித்த பின்னர் அவர் யாருக்கு வாக்கு அளித்தார் என்பதை உறுதிசெய்து காட்டுகிற வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச்சீட்டுகளை மைக்ரோ சிப் இல்லாத பெட்டியில் சேகரித்து, அவற்றின் அடிப்படையில்தான் தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என தெரிவித்தார்.

தற்போது மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவாகிற வாக்குகளின் அடிப்படையில்தான் முடிவு அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை 'மைக்ரோசிப்' பொருத்தாத பெட்டியில் சேகரித்து அதன் அடிப்படையில் முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

'நம்பிக்கையின்மை நிலவுகிறது'

முன்னதாக திக்விஜய் சிங் மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் தொலைவிட வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக டுவிட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருந்ததாவது:-

தொலைவிட வாக்குப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் நலனை முன்னிட்டு, தேர்தல் கமிஷன், சீஷரின் மனைவி போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

மின்னணு வாக்கு எந்திரங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் நம்பிக்கையின்மை நிலவுகிறது. 'சிப்'புடன் கூடிய எந்தவொரு எந்திரமும் தவறு செய்வதற்கு வாய்ப்பு இல்லாததாக இல்லை. இது உலகளாவிய உண்மை. மக்கள் நல ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் எழுப்பியுள்ள கேள்விகளில், அவர்களை தேர்தல் கமிஷன் திருப்திப்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் நான் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நான் வலியுறுத்துவது, மிகவும் எளிமையான, அர்த்தமுள்ள கோரிக்கை ஆகும். மின்னணு வாக்கு எந்திரங்களில் வாக்கு அளிப்பதில் எளிய மாற்றம் வேண்டும்.

ஒருவர் வாக்குப்பதிவு செய்தபின்னர் அவர் யாருக்கு வாக்கு அளித்தார் என்பதை உறுதி செய்கிற ஒப்புகைச்சீட்டு 7 வினாடிகளுக்கு பிறகு தோன்றுகிறது. அதைப் பார்ப்பதற்கு பதிலாக அந்த ஒப்புகைச் சீட்டை வாக்காளர் கைகளில் தர வேண்டும், அதை அவர் 'மைக்ரோசிப்' பொருத்தப்படாத பெட்டியில் போட வேண்டும். அவற்றின் அடிப்படையில் முடிவினை அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்