மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை: ராகுல்காந்தியுடன் நடந்து சென்ற திக்விஜய் சிங் தவறி விழுந்ததால் பரபரப்பு

ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையாக நடந்து சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-26 17:07 GMT

 

ராகுல்காந்தியுடன் நடந்தார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி முதல் நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரை மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம் வழியாக நடந்தது.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் அவரும் நடந்து சென்றார். இந்த யாத்திரையின் இடைவேளையில் தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் இருந்த உணவு விடுதிக்கு பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் சென்றனர். அவர்களுடன் திக்விஜய் சிங்கும் சென்றார்.

தொண்டர்கள் தூக்கி விட்டனர்

அப்போது அவர் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை சக காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சேர்ந்து தூக்கி விட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே வார்த்தை மோதலுக்கு வழி வகுத்து இருக்கிறது. மாநிலத்தில் சாலைகள் மோசமாக இருப்பதால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராகுல் காந்தியின் பயணத்தில் பங்கேற்ற திக்விஜய் சிங் இதுவரை 4 முறை தவறி விழுந்துள்ளார். ஆனால் மத்திய பிரதேசத்தில் இது முதல் முறை. மாநிலத்தின் சாலைகள் மோசமாக இருப்பதே இதற்கு காரணம்' என்று தெரிவித்தார்.

பா.ஜனதா பதிலடி

அமெரிக்காவின் வாஷிங்டனை விட மத்திய பிரதேசத்தில் சாலைகள் சிறப்பாக இருப்பதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஏற்கனவே கூறியிருந்ததை கிண்டல் செய்த ஜெய்ராம் ரமேஷ், மத்திய பிரேதசத்தின் உயிர் பறிக்கும் சாலைகள் காரணமாக தான்கூட 3 முறை கீழே விழும் சூழல் உருவானதாகவும் தெரிவித்தார்.

எனினும் காங்கிரஸ் தொண்டர்கள் பிடித்து தள்ளியதால்தான் திக்விஜய் சிங் கீழே விழுந்ததாக பா.ஜனதா தலைவர் நரேந்திர சலுஜா பதிலடி கொடுத்து உள்ளார்.

ஏழை பெண் சந்தித்தார்

மத்திய பிரதேசத்தில் கடந்த 23-ந்தேதி முதல் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இதில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்து கொண்டார்.

இந்த யாத்திரை செல்லும் வழியில் பர்வகா நகரில் சாலையோரம் நின்றிருந்த ஒரு ஏழை பெண் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் தனது ஏழ்மை நிலையை ராகுல் காந்தியிடம் விவரித்தார். அவர் கூறுகையில், 'நாங்கள் ஏழைகள். பல்வேறு இடங்களில் குப்பைகளை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். குடிசையில் வாழும் எங்களுக்கு தண்ணீரோ, மின்சாரமோ கிடையாது. எங்கள் குரல் அரசுக்கு எட்டவில்லை' என்றுதெரிவித்தார்.

அரசியல் சாசன தின பொதுக்கூட்டம்

அந்த பெண்ணின் குடும்பத்தினரும் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் நிலை குறித்து விவரித்தனர். அவர்களது கோரிக்கைகளை ராகுல் காந்தி பொறுமையுடன் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை மாலையில் அம்பேத்கரின் பிறந்த இடமான மோவை அடைந்தது. அரசியல் சாசன தினத்தையொட்டி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்