பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை-எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு

கர்நாடகத்தில் பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை-எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2022-12-16 21:14 GMT

பெங்களூரு:-

தோல்வி அடைந்தேன்

கொப்பலில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன். அதில் தோல்வி அடைந்ததால் எனக்கு பயன் ஏற்பட்டது. அதனால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன். கொப்பலில் பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.

பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்

ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. தங்களது இரட்டை என்ஜின் அரசு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் கொப்பல் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்ததா?. மராட்டியத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அந்த அரசிடம் இதுபற்றி பேசாதது ஏன்?.

இந்த பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள். இது லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன. பணி நியமனங்கள், பணி இடமாற்றங்கள் என அனைத்திலும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

அன்ன பாக்கிய திட்டம்

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ இலவச அரிசி வழங்கினேன். அதை பா.ஜனதா அரசு 5 கிலோவாக குறைத்துவிட்டது. எனது ஆட்சியில் 15 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்கு கட்டி கொடுத்தேன். கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அங்கு அரசு துறைகளில் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பினோம். அந்த பகுதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா மக்களுக்கு 600 வாக்குறுதிகளை அளித்தது.

25 வாக்குறுதிகள்

அதில் இதுவரை 25 வாக்குறுதிகள் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் பசவராஜ் பொம்மை செயல்படுகிறார். பிரதமர் மோடியின் முன்பு அபர் கைகடடி நிற்கிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்