கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்தாரா?

அரசு பஸ் தீப்பிடித்ததில் கண்டக்டர் உடல் கருகி பலியானதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-23 18:45 GMT

பேடரஹள்ளி-

கண்டக்டர் கருகி சாவு

பெங்களூருவில் பி.எம்.டி.சி. (அரசு) பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் முத்தய்யா. இவர், சும்மனஹள்ளி பணிமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 9-ந் தேதி நள்ளிரவு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லிங்கதீரனஹள்ளி அருகே அரசு பஸ்சை டிரைவர் பிரகாஷ் நிறுத்தி வைத்திருந்தார். அந்த பஸ்சில் தான் முத்தய்யா கண்டக்டராக இருந்திருந்தார். கடைசி பயணத்தை முடித்துவிட்டு லிங்கதீரனஹள்ளியில் பஸ்சை நிறுத்திவிட்டு கண்டக்டர் முத்தய்யாவும், உள்ளே படுத்து தூங்கினார்.

மறுநாள் அதிகாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் கண்டக்டர் முத்தய்யா உடல் கருகி பலியானார். டிரைவர் பிரகாஷ் அருகில் உள்ள டிரைவர்களுக்கான அறையில் படுத்து தூங்கி இருந்தார். இதனால் அவர் உயிர் தப்பித்து இருந்தார். இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், பஸ்சில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து முத்தய்யா பலியானதாக கூறப்பட்டது.

ரூ.700 பண பரிமாற்றம்

அதே நேரத்தில் முத்தய்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் பிரகாசிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கும் பஸ்சில் தீப்பிடித்ததற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில், கடநத 9-ந் தேதி நள்ளிரவு முத்தய்யாவின் செல்போனில் இருந்து கடைசியாக ரூ.700 ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்திருந்தனா. அதாவது அதே பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை முத்தய்யா வாங்கி இருந்தார்.

மேலும் பஸ்சில் தான் மட்டும் தனியாக படுத்து கொள்வதாகவும், பிரகாசை டிரைவர் அறைக்கு சென்று படுத்து தூங்கும்படியும் முத்தய்யா அனுப்பி வைத்திருந்தார். மேலும் பிரகாஷ் சென்ற பிறகு, பெட்ரோல் விற்பனை மையத்திற்கு சென்று பெட்ரோல், டீசல் வாங்கியதுடன், பஸ்சின் ஜன்னல் கதவுகளை முத்தய்யா உட்புறமாக பூட்டி இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்தாரா?

இதன் காரணமாக அவர், பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும, அந்தஅறிக்கை கிடைத்தால் தான் பஸ்சில் தானாக தீப்பிடித்ததா? அல்லது கண்டக்டர் முத்தய்யா தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவரும் என பேடரஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்