துருவநாராயண் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயணின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2023-03-12 20:56 GMT

கொள்ளேகால்:-

துருவநாராயண் மரணம்

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தவர் துருவநாராயண் (வயது 61). இவர் முன்னாள் எம்.பி.யும் ஆவார். சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹெக்கவாடியை சேர்ந்த அவர், மைசூரு விஜயநகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மைசூருவில் உள்ள வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் துருவநாராயணின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

இறுதிச்சடங்கு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துருவநாராயணின் உடல் மைசூருவில் இருந்து சாம்ராஜ்நகருக்கு கொண்டு வரப்பட்டது. சாம்ராஜ்நகரில் அம்பேத்கர் மைதானத்தில் துருவநாராயணின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்களும், அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் துருவநாராயணின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஹெக்கவாடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இந்து முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட பலர் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடல் அடக்கம்

பின்னர் மதியம் 2 மணி அளவில் துருவநாராயணின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் செய்யப்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். இதையடுத்து அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் துருவநாராயணுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

துருவநாராயண் மகனுக்கு டிக்கெட் வழங்க ஆதரவாளர்கள் கோஷம்

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த துருவநாராயண், வருகிற சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக அவர் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வந்தார். அந்த தொகுதியில் துருவநாராயணுக்கு டிக்கெட் வழங்க காங்கிரஸ் மேலிடமும் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. தற்போது அவர் இறந்து விட்டதால், நஞ்சன்கூடு தொகுதியில் துருவநாராயணின் மூத்த மகன் தர்ஷனுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் துருவநாராயணின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று துருவநாராயணின் உடல் அடக்கம் செய்யும்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் தர்ஷனுக்கு நஞ்சன்கூடு தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்போது அவர்களை அமைதியாக இருக்கும்படி டி.கே.சிவக்குமார் கேட்டு கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்