திருப்பதியில் பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருப்பதியில் நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி,
திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாட வீதிகளில் சாமி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தாலும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த அளவு மட்டுமே இருந்தது.
கருட சேவை அன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.300 கட்டண சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் பிரம்மோற்சவ நிறைவு பெற்றதால் அனைத்து தரிசனங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இலவச தரிசன வரிசை சீலா தோரணம் வரை 5 கி. மீ தூரத்திற்கு வரிசையில் காத்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 40 மணிநேரம் வரை ஆகிறது. திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குளிரில் நடுங்கியபடி வரிசையில் நின்று கொண்டு உள்ளனர்.
திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 41,071 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் தேவஸ்தான சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.