மோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற ரோப்கார்; அந்தரத்தில் பரிதவித்த பக்தர்கள்!
மத்திய பிரதேசத்தில் மோசமான வானிலையால், ரோப்காரில் பயணித்த பக்தர்கள் சுமார் 40 நிமிடம் தத்தளித்தனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் மோசமான வானிலையால், ரோப்காரில் பயணித்த பக்தர்கள் சுமார் 40 நிமிடம் தத்தளித்தனர்.
கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தியோகர் ரோப்கார் சம்பவம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹரில் அதேபோன்றதொரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவிலான காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
மைஹாரில் உள்ள பிரசித்தி பெற்ற சாரதா தேவி கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கேபிள் கார் சேவை மலையின் உச்சிக்கு பக்தர்களை ஏற்றிச் செல்கிறது.
இந்நிலையில், கோவிலுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள், நடுவானில் கேபிள் கார்களில் சிக்கி தவித்தனர். மோசமான வானிலை முன்னறிவிப்பு இருந்தபோதிலும் கேபிள் கார் சேவைகள் தொடர்ந்தன. அப்போது மழையுடன் கூடிய பலத்த புழுதிப் புயல் ஏற்பட்டதால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் மின்சாரம் சீராகும் வரை கேபிள் கார் இயக்க முடியவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து, மீண்டும் மின் வினியோகம் சீரானதும், ரோப்கார் இயக்கப்பட்டடு பக்தர்கள் மீட்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.