கர்நாடகத்தில் ரூ.1,400 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்; மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் ரூ.1,400 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-24 21:58 GMT

பெங்களூரு:

ரூ.1,400 கோடியில்...

கூட்டுறவுத்துறை சார்பில் பெங்களூரு அருகே உள்ள கொம்மகட்டா கிராமத்தில் கூட்டுறவு சவுத் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு ரூ.1,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டினார்.

அதாவது, 67 ஏக்கரில் வேளாண் விற்பனை சந்தை, ரூ.11 கோடியில் பின்னிபேட்டை ஏ.பி.எம்.சி.யில் பூ வியாபாரிகளுக்கான சந்தை, யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி.யில் ரூ.8 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் கீழ் ரூ.238 கோடியில் புதிய ஆக்சிஜன் ஆலை, பாதாள வடிகால் வசதி, பனசங்கரியில் ரூ.31 கோடியில் சாலை அமைத்தல், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கும்பலகோடு, ராமோஹள்ளி, ஜாலஹள்ளி, சிக்கனஹள்ளி, பகுதியில் ரூ.182 கோடி செலவில் குடிநீர் திட்ட பணிகள், யஷ்வந்தபுரத்தில் ரூ.128 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், ரூ.430 கோடியில் 100 மெகாவாட் சோலார் பவர் பிளாண்ட், சிக்பள்ளாப்பூர் மற்றும் பிரியப்பட்டணாவில் ரூ.140 கோடியில் கால்நடை தீவன ஆலை உள்ளிட்ட ரூ.1,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

சிவமொக்கா டவுன் நவிலே அருகே ராகிகுட்டா பகுதியில் உள்ள மொரார்ஜி தேசாய் பள்ளி கட்டிடத்தில் நாட்டின் 4-வது தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளை அமைக்கப்பட்டது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளையை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா ஆகியோரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிவமொக்காவில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி., மாவட்ட கலெக்டர் செல்வமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லி சென்றார்

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அமித்ஷா அங்கிருந்து புறப்பட்டு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்