தேவேந்திர பட்னாவிஸ் காரை மறித்து போராடிய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

போலீஸ் வேலைக்கு ஆள் தேர்வு செய்ய கோரி தேவேந்திர பட்னாவிஸ் காரை மறித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.;

Update: 2022-09-17 22:15 GMT

வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் சார்பில் சுமார் ரூ.1½ லட்சம் கோடி முதலீட்டில் மராட்டியத்தில் அமைய இருந்த செமிகன்டக்டர் ஆலை திட்டம் திடீரென குஜராத் மாநிலத்திற்கு கைநழுவி போனது.

நாந்தெட்டில் சுற்றுப்பயணம்

இந்த விவகாரத்தில் மராட்டிய எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடின. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வேலையில்லா மராட்டிய இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாந்தெட் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு மரத்வாடா விடுதலை தின விழாவில் கலந்து கொண்டார்.

போராட்டம்

பின்னர் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பட்னாவிஸ் புறப்பட்டார். ஸ்ரீநகர் பகுதியில் அவரது வாகன அணிவகுப்பு சென்றபோது சாலையில் ஏராளமான இளைஞர்கள் திரண்டு போராட்டம் செய்தனர். போலீஸ் வேலைக்கு உடனடியாக ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பட்னாவிஸ் வாகன அணிவகுப்புக்கு வழிவிட அவர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், காரில் இருந்து இறங்கி வந்த பட்னாவிஸ் இளைஞர்கள் சிலரிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தடியடி

இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீஸ் தடியடி நடத்தியதை நாந்தெட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரமோத் குமார் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "போராட்டக்காரர்களை கலைந்து போக செய்வதற்காக போலீசார் தடியால் தரையில் தான் அடித்தனர். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிலரை போலீசார் பிடித்து சென்றனர். அவர்களும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

இதேபோல தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படுவதை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மறுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்