செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரம் அழிப்பு - அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் நாள்தோறும் ஆதாராங்கள் அழிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.;
புதுடெல்லி,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிரான அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்க சென்னை ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் கடுமையான ஆதார அழிப்பு நடைபெறுகிறது. அவர் மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர் என்பதால் , விசாரணையை தாமதப்படுத்தினால் வழக்கு நீர்த்துப் போகும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளது.
மேலும், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் குறிப்பிட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதன்பின், செந்தில் பாலாஜி வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. இருப்பினும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற ஜாமீன் வழங்காத நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிமன்ற காவலில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கலாம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பரதசக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதன் காரணமாக தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கானது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.