காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிப்பு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
குல்மார்க்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான பயணமாக காஷ்மீரில் உள்ள குல்மார்க் சென்றுள்ளார். நேற்று அங்கு காஷ்மீர் யூனியன் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
காஷ்மீர் மாநிலம், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தேர்தல் நடத்தாததால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அந்தவகையில், காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டது.
தனது தவறான கொள்கைகளையும், முழு தோல்வியையும் மறைக்க மத்திய அரசு இப்படி செய்து வருகிறது. அனைத்து முனைகளிலும் மக்களை கைவிட்டுவிட்டது. காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் காஷ்மீர் நிர்வாகம், மக்களை அலைக்கழித்து வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஆக்கிமிரப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின்பற்றுவதால், இளைஞர்கள் ஏராளமானோர் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரசில் சேர விரும்புவோருக்கு எப்போதும் கதவை திறந்து வைக்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாடுபட அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களின் வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அடிக்கடி இங்கு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.