வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை மூட கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூருவில் மகனுடன் சினிமா பார்ப்பதற்காக அழுக்கு வேட்டி அணிந்து சென்ற விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-07-18 10:15 GMT

 பெங்களூர்,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரை சேர்ந்தவர் பகீரப்பா. இவரது மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். ராணிபென்னூரில் இருந்து பகீரப்பா பெங்களூருவுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் தனது மகனுடன் ராஜாஜிநகர் அருகே மாகடி ரோட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சினிமா பார்ப்பதற்காக பகீரப்பா சென்றார். அப்போது அவர் வேட்டி அணிந்து இருந்ததுடன், தலையில் துண்டுவை சுற்றிக்கொண்டு இருந்தார்.

பகீரப்பா வேட்டி மற்றும் அழுக்கு சட்டையுடன் இருப்பதை பார்த்த காவலாளி, அவரை வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்க மறுத்து விட்டார். இதனால் பகீரப்பா வணிக வளாகத்தில் இருந்து மகனுடன் வீடு திரும்பினார். இதுபற்றி அறிந்த கன்னட அமைப்பினர் நேற்று காலையில் அந்த வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது வணிக வளாகத்திற்கு எதிராகவும், விவசாயிக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினார்கள். வணிகவளாக உரிமையாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தினார்கள். பின்னர், நடந்த சம்பவத்திற்கு வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. நேற்று காலையில் பகீரப்பாவை வணிக வளாகத்திற்கு வரவழைத்து அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வணிக வளாக நிர்வாகத்தினர் கவுரவித்தனர்.

அதன்பிறகு வணிக வளாகத்திற்குள் பகீரப்பாவை உற்சாகமாக வணிகவளாக நிர்வாகிகள் அழைத்து சென்றார்கள். இதையடுத்து, கன்னட அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டார்கள். அதே நேரத்தில் விவசாயியை வணிகவளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், வணிகவளாகத்தை ஒரு வாரத்திற்கு மூடுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்