டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை;சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-11 21:56 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முதல்-மந்திரி சித்தராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பயப்பட தேவை இல்லை

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் பெங்களூருவில் உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். இந்த டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு நகர எல்லைக்குள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்வது, தூய்மையை பராமரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுற்றிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு

சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், டெங்கு கண்காணிப்பு தொழில்நுட்ப இணைய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த டெங்கு குறித்த மென்பொருள், சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள ரோபோடிக் தொழில்நுட்ப பார்க் மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இது, டெங்கு காய்ச்சல் பரவலை 4 வாரங்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கும். கர்நாடகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் இது பரவும் என்பது குறித்த தகவலையும் ஆண்டு முழுவதும் வழங்கும். வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் பிற நோய்களை கண்டறியவும் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

தொழில்நுட்ப வசதி

தற்போது இந்த இணைய பக்கத்தை சுகாதாரத்துறை ஊழியர்களே மட்டுமே பார்க்க முடியும். வரும் நாட்களில் இதை பொதுமக்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த தொழில்நுட்ப வசதியை கொண்ட செல்போன் செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது பெங்களூருவில் ஆஷா ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்போர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்