பெங்களூருவில் 3-வது நாளாக தொடருகிறது: ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி
பெங்களூருவில் 3-வது நாளாக ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது.
பெங்களூரு:
3-வது நாளாக...
பெங்களூருவில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதற்கு ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்பட்டதே காரணம் என்று தெரியவந்து உள்ளது. இதனால் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற மாநகராட்சிக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து கடந்த 12-ந் தேதி முதல் பெங்களூருவில் ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடந்தது. மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள சல்லகட்டா, முனேகொலலு, பாப்பிரெட்டிபாளையா உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. சல்லகட்டாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ. ஹாரீசுக்கு சொந்தமாக கட்டிடமும் இடிக்கப்பட்டது.
போராட்டம்
இதுபோல எலகங்கா சிங்காபுரா லே-அவுட்டிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. சிங்காபுரா லே-அவுட்டில் ஒரு குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலை ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த தொழிற்சாலையை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு வேலை செய்யும் 400 பேரின் வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் நந்தினியின் கணவர் சீனிவாசுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. அதை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனிவாஸ் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.