சாலை விரிவாக்க பணிக்காக தர்கா இடித்து அகற்றம்

உப்பள்ளியில் சாலை விரிவாக்க பணிக்காக தர்கா இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-21 18:45 GMT

உப்பள்ளி:-

சாலை விரிவாக்க பணி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பைரிதேவரகொப்பா டவுன் பகுதியில் பழமையான தர்கா உள்ளது. இந்த தர்கா உப்பள்ளியில் இருந்து தார்வாருக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. இதற்கான பணிகளில் இறங்கியபோது, அங்குள்ள தர்காவை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு தர்கா நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உப்பள்ளியில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டின் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அவர், சாலை விரிவாக்க பணிக்காக தர்காவை இடித்து அகற்றலாம் என்று கூறி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தர்காவை இடிக்க நெடுஞ்சாலைத்துறை மற்று தார்வார்-உப்பள்ளி மாநகராட்சியினர் முடிவு செய்தனர். அதற்கான பணிகளையும் மேற்கொண்டனர். ஆனால் அதிகாலையில் போலீசார் வர காலதாமதம் ஆனதால் தர்காவை இடித்து அகற்றும் பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் காலை 6 மணிக்கு போலீசார் அங்கு வந்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு

3 துணை மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், 250 போலீஸ்காரர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் தர்காவை இடித்து அகற்றும்போது யாரும் பார்க்க கூடாது, மக்கள் அங்கு வந்துவிட கூடாது என்பதற்காக சாலைகளில் இருபுறங்களிலும் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இதுதவிர தர்கா வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதைகளில் அனுப்பி வைக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க தர்காவை சுற்றி 200 மீட்டர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் அந்த தர்காவை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கூடுதல் போலீசார் குவிப்பு

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த தர்காவை இடித்து அகற்றியதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காக பா.ஜனதா அரசு, தர்காவை இடித்து அகற்றியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்