2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரமாக மாறும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை..!!
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை 2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரமாக மாறியுள்ளது.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேசமயம் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவதற்கான கோரிக்கை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே பக்கத்தில் நிறுத்தியுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2011-ல் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு
இந்த கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், அதனடிப்படையில் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும், பல்வேறு கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பீகாரில் ஆளும் 'மகாத்பந்தன்' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இதனை ஒருபோதும் செய்யமாட்டார். பிரதமர் மோடிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசியினர் மீது அக்கறை இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசு நிச்சயம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்" என்றார்.
எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரம்
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்துத்துவா கொள்கையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவது ஆகியவை 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரமாக மாறியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.