வனத்தில் வசிக்கும் மக்கள், ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்த நடிகர் ரிஷப் ஷெட்டி, வனப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு:-
பிரபலமாகிவிட்டார்
மலைவாழ் மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'காந்தாரா' கன்னட படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. வெறும் ரூ.16 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.450 கோடி வசூலை குவித்தது. முதலில் கன்னடத்தில் எடுக்கப்பட்டு பிறகு பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டார். தற்போது 'காந்தாரா-2' படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் நடிகர் ரிஷப் ஷெட்டி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஒரு கோரிக்கை மனுவை முதல்-மந்திரியிடம் அவர் வழங்கினார்.
நேரத்தை செலவழித்தேன்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காந்தாரா படம் வெளியான பிறகு நான் வனப்பகுதியில் சுற்றி அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் வனத்துறையில் வனத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நேரில் சந்தித்து உரையாடி நேரத்தை செலவழித்தேன். அப்போது அவர்கள் தங்களுக்கு உள்ள சில பிரச்சினைகளை என்னிடம் கூறினர். அந்த பிரச்சினைகள் அடங்கிய ஒரு கோரிக்கை மனுவை தயார் செய்து முதல்-மந்திரியை சந்தித்து வழங்கியுள்ளேன்.
அந்த பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதற்காக முதல்-மந்திரிக்கு நன்றி
தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.