நாகாலாந்தில் வலுப்பெற்று வரும் "தனி மாநில" கோரிக்கையில் தவறு இல்லை: முதல்-மந்திரி நெய்பியூ ரெவ்
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கிழக்கு நாகாலாந்தில் தனி மாநில கோரிக்கை வலுத்துள்ளது.
கோஹிமா,
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தனி மாநில கோரிக்கை வலுத்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாகாலாந்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கிழக்கு நாகாலாந்தில் தனி மாநில கோரிக்கை வலுத்துள்ளது.
கிழக்கு நாகாலாந்து பகுதியானது மோன், துயென்சாங், கிஃபிர், லாங்லெங், நோக்லக் மற்றும் ஷமடோர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியது.இங்கு ஏழு பிரிவுகளை சார்ந்த பழங்குடியினர் வசிக்கின்றனர்.
நாகாலாந்து மாநிலமாகி 58 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, இந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாமல் புறக்கணிக்கப்படுவதாக 'கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு(இஎன்பிஓ)' குற்றம்சாட்டி வருகிறது.2010 முதல் 'எல்லைப்புற நாகாலாந்து' என்ற கோரிக்கையை இஎன்பிஓ வலியுறுத்தி வருகிறது.
நாகாலாந்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் ஹார்ன்பில் திருவிழாவில் பங்கேற்பதில்லை என கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.இந்த முடிவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து நாகாலாந்து முதல்-மந்திரி நெய்பியூ ரெவ் பேசுகையில், "மாநிலத்தின் கிழக்குப் பகுதி மக்களின் தனி மாநில கோரிக்கை தவறல்ல. இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
அவர்களுடன் பேசி வருகிறோம். மத்திய உள்துறை மந்திரி நாகாலாந்து பயணத்தின் போது அவரை சந்தித்து பேச கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்புக்கு அப்பாயின்மென்ட் கொடுப்போம். பிரதமரும் நாகாலாந்து வந்தால், அவர்களுடன் பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொள்வோம்.
ஹார்ன்பில் திருவிழா, வழக்கம் போல் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு பழங்குடியினரும் அதில் பங்கேற்க வேண்டும்" என்று கூறினார்.