டெல்லி: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது; எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

இந்தியாவை அதிக பாதுகாப்பான, சுயசார்புடைய மற்றும் வளம் நிறைந்த நாடாக உருவாக்குவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

Update: 2024-07-11 18:17 GMT

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் (வயது 73) இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையின் அதிகாரிகள் இன்றிரவு வெளியிட்ட செய்தியில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் முதுகு வலி பாதிப்புக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடக பிரிவு பொறுப்பு அதிகாரியான டாக்டர் ரீமா தாதா கூறும்போது, அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்றார்.

அவர் பழைய தனியார் வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிங், முதன்முறையாக 2019-ம் ஆண்டு பாதுகாப்பு துறை மந்திரி ஆனார். தொடர்ந்து 2-வது முறையாக, நடப்பு ஆண்டின் ஜூன் 13-ந்தேதி மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக அவர் பொறுப்பேற்று கொண்டார்.

அதன்பின் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையை பற்றிய திட்டங்களை வெளியிட்டார். அதிக பாதுகாப்பான, சுயசார்புடைய மற்றும் வளம் நிறைந்த நாடாக உருவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன், முக்கிய விசயங்களை முன்னெடுத்து செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்றார். பாதுகாப்பு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்