டெல்லி: மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் தீ விபத்து; நோயாளி உயிரிழப்பு?
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஐ.சி.யு. வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.;
புதுடெல்லி,
டெல்லியின் ரோகிணி பகுதியில் பிரம்ம சக்தி என்ற பெயரிலான மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், புறநோயாளிகளுக்கான பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால், தீ அடுத்தடுத்து பரவி புகையாக காணப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறையின் இயக்குனர் அதுல் கார்க் கூறும்போது, வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட ஒரு நோயாளி உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை தவிர அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர். தீயை முற்றிலும் அணைத்து விட்டோம் என கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.