டெல்லி-சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியது; பயணிகள் காயம்
டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து ஏ.ஐ.-302 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரை நோக்கி புறப்பட்டு சென்று உள்ளது. இந்த நிலையில், விமானம் நடுவானில் சென்றபோது திடீரென குலுங்கியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் 7 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட முதலுதவி பெட்டி ஆகியவற்றின் உதவியுடன் விமான ஊழியர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதன்பின் விமானம், சிட்னி விமான நிலையத்திற்கு சென்றடைந்ததும் ஏர் இந்தியா விமானத்தின் மேலாளர், பயணிகளுக்கு மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளை செய்து தந்து உள்ளார்.
எனினும், இதில் 3 பயணிகளே மருத்துவ உதவி பெற்றனர் என்றும் யாரும் மருத்துவமனையில் சேர வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்து உள்ளது. எனினும், இந்த சம்பவம் பற்றி ஏர் இந்தியா விமானம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியது.
இதில் அவர் வலியால் அலறி துடித்து உள்ளார். இதன்பின்னர், விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் அந்த பெண் வீடு திரும்பினார். விமானத்தில் பறவைகள் மற்றும் எலிகள் இருப்பது சில சமயங்களில் நடப்பது உண்டு. ஆனால், இது மிக அரிய நிகழ்வாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டு அந்த தேளை கண்டறிந்து, விமானத்தில் இருந்து நீக்கினர்.
பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அரிய நிகழ்வு மற்றும் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என்று கூறியுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், பெண் பயணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்காகவும், அசவுகரியத்திற்காகவும் வருந்துகிறோம் என கூறியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சரக்குகள் வைக்க கூடிய பகுதியில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.