டெல்லி: பெண்ணின் படுக்கை, குளியலறையில் ரகசிய கேமிராக்கள்; வீட்டு உரிமையாளரின் மகன் கைது

டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண்ணின் படுக்கையறை மற்றும் குளியலறையில், வீட்டு உரிமையாளரின் மகன் ரகசிய கேமிராக்களை வைத்திருக்கிறார்.

Update: 2024-09-24 14:58 GMT

புதுடெல்லி,

டெல்லியின் கிழக்கே ஷாகர்பூர் பகுதியில், இளம்பெண் ஒருவர் வாடகை வீடு ஒன்றில் தங்கி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இந்நிலையில், அவருடைய வாட்ஸ்அப் கணக்கில் வழக்கத்தில் இல்லாத வகையிலான நடவடிக்கைகளை கண்டறிந்து திடுக்கிட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அவர் வசிக்கும் வீட்டில் ரகசிய கேமிராக்கள் மற்றும் உளவு பார்க்கும் உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனவா? என ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்.

இதில், குளியலறையில் உள்ள பல்பு ஒன்றின் பின்புறம் உள்ள பகுதியில் ரகசிய கேமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஷாகர்பூர் காவல் நிலையத்தின் போலீசார் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு சென்று வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். இதில், படுக்கையறையின் பல்புக்கு பின்னால் மற்றொரு கேமிராவை கண்டுபிடித்தனர்.

வீட்டு உரிமையாளரின் மகனான கரண் என்பவரிடம், 3 மாதங்களுக்கு முன் அவரை நம்பி வீட்டு சாவிகளை அந்த பெண் கொடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். இதுபற்றி கரணிடம் போலீசார் விசாரித்ததில், அந்த பெண் உத்தர பிரதேசத்திற்கு சென்றதும், 3 ரகசிய கேமிராக்களை வாங்கி வந்து பெண்ணின் படுக்கையறை மற்றும் குளியலறையில் வைத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

எனினும், ஆன்லைன் வழியே இவற்றை இயக்க முடியாது. அதற்கான கார்டுகளை கொண்டு வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார். அதனால், வீட்டில் மின் சாதனங்களை பழுது பார்க்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என அடிக்கடி கூறி பெண்ணிடம் சாவிகளை வாங்கியிருக்கிறார். இதன்பின் அந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை லேப்டாப்புக்கு அவர் மாற்றியிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.

கரணிடம் இருந்த ரகசிய கேமிரா மற்றும் 2 லேப்டாப்புகளை போலீசார் கைப்பற்றினர். 7 ஆண்டுகளாக கரண் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அதில் வெற்ற பெற முடியவில்லை. மாற்றுத்திறனாளியான கரணை கைது செய்து புதிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்