டெல்லி: பிரியாணி தட்டில் ராமர் படம் - ஓட்டல் உரிமையாளர் கைது

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த ஓட்டல் முன்பு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-04-23 23:35 GMT

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ராமர் படம் கொண்ட பேப்பர் தட்டில் பிரியாணி பரிமாறப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதைக்கண்டு கோபமடைந்த மக்கள் பலர் அந்த ஓட்டல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்படி ஓட்டல் உரிமையாளரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவர் போலீசாரிடம் தட்டுகளில் ராமர் படம் இருப்பது குறித்து தனக்குத் தெரியாது என கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒரு தொழிற்சாலையில் இருந்து 1,000 பேப்பர் தட்டுகளை வாங்கியதும், அதில் 4 தட்டுகளில் மட்டும் ராமர் படம் அச்சிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளரை போலீசார் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்