திருடுவதற்காகவே ஆண்டுக்கு 200 முறை விமானத்தில் பறந்தவர் கைது

விமானங்களில் சக பயணி போல பயணம் செய்து மற்ற பயணிகளின் நகைகள், மதிப்புமிக்க பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-14 11:17 GMT

புதுடெல்லி,

விமானங்களில் பயணித்து, சக பயணிகளின் உடைமைகளிலிருந்து நகைகள், மதிப்புமிக்க பொருட்களை திருடியதாக ராஜேஷ் கபூர் (40) என்ற நபரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டுமே குறைந்தது 200 விமான பயணங்களை மேற்கொண்டுள்ளார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் துணை போலீஸ் கமிஷனர் உஷா ரங்னானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"விமானப் பயணிகளை குறி வைத்து திருடிவந்த ராஜேஷ் கபூரை பஹர்கஞ்சில் வைத்து கைது செய்துள்ளோம். திருடிய நகைகளை அவர் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்தார். இந்த நகைகளை ஷரத் ஜெயின் (46), என்பவரிடம் விற்க அவர் திட்டமிட்டிருந்தார். கரோல் பாக் பகுதியில் மறைந்திருந்த ஷரத் ஜெயினும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களில் விமான பயணிகளின் மதிப்பு மிக்க பொருட்கள் திருடு போவது தொடர்பாக புகார்கள் அதிகரித்தன. இதையடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார். பிப்ரவரி 2ம் தேதி, அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார்.

விசாரணையில், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், விமான பயணிகளின் பட்டியலை கொண்டும் ஆய்வு செய்யப்பட்டன. திருட்டு சம்பவங்கள் பதிவாகிய இரண்டு விமானங்களிலும் ராஜேஷ் கபூர் பயணித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில், ராஜேஷ் கபூர் இதுபோன்று பல்வேறு விமானங்களில் பயணித்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருட்டில் கிடைத்த பணத்தை கொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 11 வழக்குகள் உள்ளன. விமான பயணத்தில் மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்