டெல்லி மதுபான கொள்கை ஊழல், ரூ.100 கோடி வழங்கியதில் கவிதாவுக்கு தொடர்பு; அமலாக்கத்துறை தகவல்

டெல்லி, ஐதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் அமலாக்க துறையின் சோதனை நடந்துள்ளது.

Update: 2024-03-18 15:21 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தது.

அதற்கு முன், ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின என்று கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானாவில் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கவிதா கைது செய்யப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியில், ஆம் ஆத்மியின் தலைவர்கள் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து அவர் சதி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் வழியே, டெல்லி மதுபான கொள்கை முறைப்படுத்துதல் மற்றும் அமல்படுத்துதலில் பலன் பெற்றுள்ளார் என தெரிவித்து உள்ளது. அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளின்போது, கவிதாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையூறு செய்தனர் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த பலன் பெறுவதற்கு பதிலாக, ஆம் ஆத்மியின் தலைவர்களுக்கு ரூ.100 கோடி வழங்குவதில் அவர் தொடர்புடையவராக உள்ளார். 2021-22 ஆண்டுக்கான டெல்லி மதுபான கொள்கை முறைப்படுத்துதல் மற்றும் அமல்படுத்துதலில் ஊழல் மற்றும் சதி திட்டத்திற்கான செயல்களால், ஒரு தொடர்ச்சியான சட்டவிரோத வகையிலான நிதிகள் பெருமளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்த விற்பனையாளர்கள் வழியே வந்து குவிந்தன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை டெல்லி, ஐதராபாத், சென்னை, மும்பை மற்றும் பிற இடங்கள் உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் அமலாக்க துறையின் சோதனை நடந்துள்ளது. ஆம் ஆத்மியின் தலைவர்களான சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் விஜய் நாயர் உள்ளிட்ட 15 பேர் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். ரூ.128.79 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்