கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கோரி, டெல்லி விசாரணை கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த 20-ம் தேதி அவருக்கு விசாரணை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால், மறுநாளே டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று அம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, "கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு மீது டெல்லி ஐகோர்ட்டு இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு அளித்து விடும். அதுவரை காத்திருப்போம். அதற்குள் நாங்கள் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது ஐகோர்ட்டின் செயல்பாட்டில் குறுக்கிட்டதாக ஆகிவிடும்." இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் அவர், அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை கோர்ட்டு சரியாக ஆய்வு செய்யவில்லை. இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு போதுமான வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.