பணமோசடி வழக்கு: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன் - டெல்லி ஐகோர்ட்டு
ராணா கபூர் மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
புதுடெல்லி,
மும்பையை தலைமையகமாக கொண்டு 2004-ம் ஆண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளில் இந்த வங்கியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக வளர்த்தெடுத்தவர், அதன் நிறுவனர் ராணா கபூர்.
இந்த வங்கியில், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.4,300 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றது.
மேலும், தவறான வகையில் ரூ. 466.51 கோடி இழப்பீடு ஏற்படுத்திய இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகியுள்ள ராணா கபூர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், யெஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராணா கபூருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.