கர்ப்பிணி பெண்ணின் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்த டெல்லி ஐகோர்ட்டு
கர்ப்பிணி பெண்ணின் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டில் 31 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது வயிற்றில் இருக்கும் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிடக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், கருவில் இருக்கும் குழந்தைக்கு தீவிர உடல்நல பாதிப்புகள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டத்தின்படி, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை கலைப்பதற்கான காலகட்டம் முடிந்துவிட்டதால், கோர்ட்டு உத்தரவின்றி கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால், கருக்கலைப்புக்கான அனுமதி கோரி கோர்ட்டை அணுகியதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மனுதாரரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதோடு கருவை கலைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மனுதாரர் மற்றும் அவரது கணவரிடம் மருத்துவர்கள் எடுத்துரைத்ததாகவும், கருவை கலைக்க வேண்டும் என்பது மனுதாரரின் சொந்த முடிவு என்றும் எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கருவை தொடர்ந்து வளர அனுமதிப்பது மனுதாரரின் உடல் மற்றும் மன நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குழந்தை தீவிர உடல்நல பாதிப்புகளுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறி மனுதாரரின் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.