டெல்லி இளம்பெண் மரண விவகாரம்: தோழியுடன் குடிபோதையில் மோதல்; ஓட்டல் உரிமையாளர் திடுக் தகவல்

டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் தோழியும், அவரும் குடிபோதையில் மோதி கொண்டனர் என்ற திடுக் தகவலை ஓட்டல் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-01-03 13:24 GMT



புதுடெல்லி,

டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதுபற்றி அதிகாலை 3.24 மணியளவில் கஞ்சவாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

இதனையடுத்து, ரோகிணி மாவட்ட போலீசின் குற்ற பிரிவினர் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று, உடலை கைப்பற்றி மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், இளம்பெண் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இளம்பெண் மீது மோதிய பலினோ ரக காரில் 5 பேர் சென்றுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் தனியார் நிறுவன பணியாளர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

குடிபோதையில் காரில் சென்றவர்கள் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது மோதி சில கி.மீ. தூரம் இழுத்து சென்றுள்ளனர். டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் நிர்வாண நிலையிலான உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது ஆபத்துக்குரிய விசயம்.

இந்த விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். காரில் குடிபோதையில் 5 பேர் சென்றுள்ளனர். இளம்பெண்ணுக்கு எப்படி நீதி வழங்க போகின்றீர்கள் என டெல்லி போலீசாருக்கு சம்மன் அனுப்பி உள்ளேன் என அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வேதனையையும் வெளிப்படுத்தினார். இந்த விவகாரத்தில், ஆளுநர் வினய் சக்சேனாவின் இல்லத்தின் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நேற்று நண்பகலில் ஒன்று திரண்டு, உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் பற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம் என கூறினார்.

இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன்.

அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்ட கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார் என்று கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், இளம்பெண் கொடூர மரண விவகாரத்தில் குற்றவாளிகளை டெல்லி போலீசார் பாதுகாக்கின்றனர் என ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றையும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த தேசிய செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, குற்றவாளியான பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நபரான மனோஜ் மிட்டல் போலீசாரால் பாதுகாக்கப்படுகிறார்.

டெல்லி துணை காவல் ஆணையாளர் (டி.சி.பி.) ஹரேந்திரா சிங், குற்றவாளிகளின் வாய்மொழியாக பேசுகிறார். அவர்களை பாதுகாக்க முயல்கிறார். டி.சி.பி.யையும், காவல் உயரதிகாரியையும் ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யவில்லை? டி.சி.பி. பத்திரிகையாளர்களை மிரட்ட முயற்சிக்கிறார் என்று கூறினார்.

காவல் நிலையத்திலேயே ஜாமீன் கிடைக்க கூடிய வகையிலான 304 ஏ, என்ற பலவீன பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டி.சி.பி. சிங் கூறும்போது, மிட்டல் மதுபானம் குடித்திருக்கிறாரா, இல்லையா? என மருத்துவ பரிசோதனை முடிவு செய்யும் என கூறுகிறார்.

ஆனால், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என அவர் கூறுகிறார். இதனை உறுதிப்படுத்துங்கள் என்று பரத்வாஜ் கடுமையாக கூறியுள்ளார். கவர்னர் சக்சேனாவை நீக்க வேண்டுமென்றும் மத்திய அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் டெல்லி கஞ்சவாலா சம்பவத்தில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இவ்வளவு நேரம் வீட்டுக்கு செல்ல எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் உள்ளது. இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டனர் என கூறப்படுகிறது.

இதனை அவர்கள் வெளியே வந்த ஓட்டலின் உரிமையாளர் கூறிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் குடிபோதையில் மோதி கொண்ட நிலையில், அவர்களை ஓட்டலை விட்டு வெளியேற்றினேன் என அவர் தெரிவித்து உள்ளார். இது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்