டெல்லி இளம்பெண் மரண விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என மகளிர் ஆணையம் கோரிக்கை

டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்து உள்ளது.;

Update: 2023-01-05 11:25 GMT


புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் பின்னால் அமர்ந்து சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது என தகவல் வெளியானது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பல்வேறு விடையில்லாத மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

அஞ்சலிக்கு பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறும்போது, அதிகாலை 2.22 மணியளவில், பெண் ஒருவர் காரில் சிக்கியுள்ளார் என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. ஆனால், 4.15 மணிக்கு நிர்வாண நிலையிலான உடல் கிடக்கிறது என்ற தகவல் கிடைத்த பின்னரே போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

13 கி.மீ. தொலைவிலான அனைத்து சி.சி.டி.வி. காட்சிகள் பதிவையும் போலீசார் ஆய்வு செய்யவில்லை. அனைத்து சாட்சிகளின் வாக்குமூலமும் பெறப்படவில்லை. 302 பிரிவு சேர்க்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். நிதியின் மொபைல் போனை நாங்கள் இன்னும் பறிமுதல் செய்யவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர்.

அது மிக முக்கிய சான்றாக இருக்கும். போலீசிடம் அது ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்பது எனக்கு புரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில், டெல்லி போலீசின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள 5 பேரிடம் விசாரித்ததில், சம்பவத்துடன் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

அவர்கள் அஷுதோஷ் மற்றும் அங்குஷ் கன்னா என தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். இவர்கள் இருவரும் போலீசாரின் காவலில் உள்ள 5 பேரின் நண்பர்கள். குற்றவாளிகள் அனைவரையும் காப்பாற்ற இந்த 2 பேர் முயன்றனர் என கூறியுள்ளார்.

அவர்களில் அஷுதோஷ் என்பவர் காரின் உரிமையாளர். அங்குஷ், குற்றவாளிகளில் ஒருவரது சகோதரர். அவர்கள் இருவரும் சாட்சிகளை கலைக்க முயன்றுள்ளனர்.

நாங்கள் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம். சாட்சியின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம். அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்