டெல்லியில் பாலம் இடிந்து விழுந்தது - பொக்லைன் டிரைவர் பலி
டெல்லியில் பாலம் இடிந்து விழுந்ததில் பொக்லைன் டிரைவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் துவாரகா விரைவுச்சாலையில் சமல்கா என்ற இடத்தில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
நேற்று காலை, அந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பொக்லைன் வாகனத்தை ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். இடிந்த பாலப்பகுதி, பொக்லைன் வாகனம் மீது விழுந்ததில், வாகனம் நொறுங்கியது.
பொக்லைன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த ஷகீல் (வயது 35) என்பவர் உடல் நசுங்கி பலியானார். அவர் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்தவர்.
பாலம் இடிந்த தகவலை அறிந்து, 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலப்பணி மேற்பார்வையாளரும், மேலாளரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.