கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட்டு மறுப்பு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு வழங்க டெல்லி கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-06-05 12:17 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டு அளித்தது. இந்த ஜாமீன் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் மீண்டும் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற காவலில் உள்ளதால் திகார் சிறை அதிகாரிகள் கெஜ்ரிவாலின் மருத்துவ தேவையை கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

முன்னதாக, ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்