டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று குஜராத் பயணம்..!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.;

Update: 2022-10-08 03:44 GMT

புதுடெல்லி,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனையடுத்து, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் குஜராத்திற்கு செல்ல உள்ளார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தாஹோத் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

அதன்பின், வதோதரா நகரில் நடைபெறும் மூவர்ண யாத்திரையில் பங்கேற்க உள்ளனர். வல்சாத் மற்றும் சூரத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மனோஜ் சோரத்தியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்