டெல்லி: பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி கேள்வி எழுப்பி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி கேள்வி எழுப்பி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-03-30 06:45 GMT

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க.வும் டெல்லியில் மாறி, மாறி எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை கொண்ட போஸ்டர்களை ஒட்டி வருவது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 23-ந்தேதி ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் பொதுகூட்டம் நடந்தது. மோடியை நீக்குங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில், கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கலந்து கொண்டனர்.

இதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நிலையில், அதற்கு பதிலடியாக பா.ஜ.க.வும் செயல்பட்டது.

அக்கட்சியின் டெல்லி தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா சார்பில் கெஜ்ரிவாலுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டிய விவகாரத்தில் டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 100-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய 6 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, பா.ஜ.க. சார்பிலான போஸ்டர்களில் கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் தென்பட்டன.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

ஜனநாயகத்தில், ஒரு தலைவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தங்களது பார்வைகளை வெளியிட பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. அதனால், எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது என கூறியுள்ளார்.

இதுபற்றி குறிப்பிட்ட கெஜ்ரிவால், சமூக ஊடகத்தில், கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள் என அவர்கள் எழுதியிருந்த விவரங்களை பார்த்தேன். அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை.

ஆனால், பிரதமர் ஏன் பயந்து போய்விட்டார்? ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டலாம் என கூறினார்.

இதற்காக அவர்களது பிரிண்டர்களை கைப்பற்றி, அந்த நபர்களை ஏன் கைது செய்தனர் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அழகல்ல என கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக இந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி தவிர்த்து, குஜராத்தி, தெலுங்கு, வங்காளம், ஒரியா, கன்னடா, மலையாளம் மற்றும் மராத்தி என 11 மொழிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்திய பிரதம மந்திரிக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டுமா? என்ற வகையில் கேள்வி கேட்டு சாலையின் ஓரங்களில், சுவர்கள் மற்றும் தூண்களில் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

இதுபற்றி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கோபால் ராய் முன்பு கட்சி கூட்டம் ஒன்றில் கூறும்போது, நாடு முழுவதும் மோடியை நீக்குங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என இன்று முதல் போஸ்டர் ஒட்டப்படும் என கூறினார். இந்த நிலையில், டெல்லியில் காணப்படும் இதுபோன்ற போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்